Friday 28 February 2014

மற்றுமொரு தினம்

சோழன் பெயரைக் கொண்டு மருவி நிற்கும் அந்த ஊரில் அமைந்த அமெரிக்க நாணயத்தின் பெயரைக் கொண்ட அந்த பேருந்து நிறுத்தம்.
காலை 9 மணி

வால்மிகியின் ஊரில் இருந்து ஊர்ந்து வரும் அந்த பேருந்தில் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழியும். அதனுள் எப்படியாவது நம்மை திணித்துக் கொண்டு ஒற்றைக் காலில் நின்றால் அடுத்த ஐநூறு மீட்டரில் அடுத்த நிறுத்தம். அங்கு சில ஏற்ற இறக்கங்களுக்குப் பின்னர் மறுபடியும் பேருந்து நகரும்.இப்போது இரு கால்களும் ஊன்ற இடம் கிடைத்திருக்கும். இதற்கு முன்னதாகவே, காலை உணவகத்தில் வாங்கிய சில்லரையை பயன்படுத்தி பயணச்சீட்டை வாங்கிவிட வேண்டும்.

நகர்ந்த அந்த பேருந்தினுள்கணினி வேகத்தில் கணக்குகளைப் போட்டு சில்லரைகளைக் கொடுத்துக்கொண்டு!! இல்ல இல்ல, குடுத்துட்டாலும்!!, வாங்கிக்கொண்டிருப்பார் நடத்துனர்கிளம்பிய ஐந்து நிமிடங்களில் உடம்பிலிருந்து அமிலம் சுரக்கும் அவ்வேளையில், அமிலப் பெயர் கொண்ட அந்த ஐ.டி கம்பெனி வந்துவிடும். ஐம்பது விழுக்காடு கூட்டம் அங்கே இறங்கிக்கொள்ள, வலப்புறம் கம்பியைக் கட்டிக்கொண்டு நிற்பவனுக்கு எப்படியும் ஒரு இடம் கிடைத்துவிடும். (அப்பவும் கிடைக்காத நாட்களும் உண்டு!!)

பேருந்தில் உள்ள அனைவரும் நிம்மதி(யாய்) மூச்சுவிடும் அந்நேரத்தில் அனைவரது காதிலும் கம்பிகள் சொருகப்பட்டிருக்கும், அதன் மற்றொரு முனை அலைபேசிகளோடு கூடி நிற்கும்! “எங்கிட்ட மட்டும் இல்லையா என்ன! நாங்களும் வச்சிருக்கோம்!!” என நினைத்துக்கொண்டு நானும் ஒன்றை எடுத்து அணிந்து கொள்வேன்.

காற்றலைகளின் கரகரப்புக்கு நடுவே குரல்கள் அமிழ்ந்து ஒலிக்கும். பெயர் தெரியாத எவரோ பேசிக்கொண்டிருப்பார். முக்கால்வாசி விளம்பரங்கள் ஒலிக்கும் அலைவரிசைகளுக்கிடையில் ரெயின்போ அல்லது ஆல் இண்டியா ரேடியோவில் இரைச்சல் இன்றி பாட்டொலிக்கும். வாய்ப்பிருந்தால் போகன் சங்கர் அவர்களின் குரலில் கவிதை ஒன்றும் பரிசாகக் கிடைக்கும். சில நாட்களில் கவிதை ஒலிக்கும் நேரம் படிக்கட்டில் நின்றிருக்க நேரும். அப்போது ரோபோ சங்கரே வந்து காமெடி செய்தாலும் சிரிக்க முடியாத நிலையில் போகன் சங்கரை மறப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நேரம் சரியில்லாத சில வேளைகளில் அனைத்து அலைவரிசையிலும் “Buy 3 BHK apartment at just Rs.10 crore” போன்ற குரல்கள் ஆக்கிரமிக்கும். அப்போது ரேடியோவை செயலிழக்க வைத்து சேமித்த பாடல்களை ஒலிக்க விடுவேன். எனக்குள் இருக்கும் ராஜா அபிமானியும் ரகுமான் அபிமானியும் சண்டையிட்டுக் கொள்ளாத வகையில் பாடல்களைக் கலந்து ஒலிக்கவிட்டு பயணத்தை தொடர்வேன்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம், பாடல்களைக் கேட்டுக் கொண்டு எண்ண அலைகளை ரேண்டமாக சிதற விட்டுக்கொண்டு பயணிக்கையில் “வெற்றியுள்ள கிறிஸ்தவ மதம்” என ஒரு விளம்பரம் தெரியும். அதுதான் அறிகுறி இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்பதற்கு.

குஷி படத்தில் விஜய்யும் ஜோதிகாவும் படித்த அந்த கல்லூரி முன் இறங்கினால், அதன் எதிரில் ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் கண்டுபிடித்த வாகனத்தின் நிலையம் இருக்கும்.(அதான், ரயில்வே டேசன்!!). நகைக் கடை விளம்பரம் ஒன்றில் நீல நிற உடையணிந்து ஒரு பெண் சிரிப்பாள். அந்தப் புன்னகையின் வசீகரத்தை மனதிலேந்திக் கொண்டு நிலையத்தினுள்  செல்கையில் இடப்புறம் ஒரு கோவிலில் எதாவது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரத்தின் புகழ் பாடும் பாடல் ஒலிக்கும்.

அதன்பின், 1 18 15 15 14 15 11 3 (எனக்கு மட்டுமே உபயோகப்படும் குறியீடு இது, படிகளின் எண்ணிக்கை) எதிர்பக்கத்தை அடைந்து விடலாம்.
அங்கு ஒருவர், முகவரியை எழுதிக் கொடுத்தால் குரான் அனுப்புவதாக சொல்லிக்கொண்டு அமர்ந்திருப்பார். அதனருகே ஒருவர் பழம் விற்றுக்கொண்டிருப்பார். அனைத்து வியாபாரிகளையும் கடந்து அங்குள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்து பங்கு ஆட்டோவிலோ சீக்கிரம் கிளம்பும் பேருந்திலோ 2 கி.மீ தள்ளி இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வாயிலுக்கு சென்று இறங்கனும். அங்கே, ரோஜர் ஃபெடரரிடம் ஆட்டோக்ராப் வாங்குவதைப் போல தாள்களை நீட்டிக்கொண்டு சிலர் நிற்பார்கள். அனைத்தும், வங்கிக் கடன் விளம்பரங்கள். இவற்றைக் கடந்து என்னை வேலைக்கு அமர்த்திய அந்த கம்பேனியின் இலவச வாகன சேவை காத்திருக்கும். தினமும் அதில் பயணிக்கையில். மரியான் முதல் காட்சிகளில், சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஞாபகம் என்னை அறியாமலேயே வந்துவிடும்.

2 நிமிடத்தில் காடுகளூக்கு நடுவே கண்ணாடிகளாலான அந்த கட்டிடம் வந்துவிடும். அடையாள அட்டையை சரிபார்த்து உள்ளே சென்று இருக்கையில் அமர்கையில் அமெரிக்காவில் எத்தனை லட்சம் பேருக்கு கிட்னி பிரச்சனை எனவும் அவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் வடிவமைப்பு குறித்த விளக்கம் மெயிலில் இருக்கும். எனக்கு இதெல்லாம் வராம இருந்தா பத்தாது!!

அப்பதான் ஞாபகம் வரும்,

“அட! வழக்கம் போல அம்மாவுக்கு கால் பண்ண மறந்துட்டேன். சாயங்காலமாவது மறக்காம கூப்டு பேசனும்”